அத்தியாயம் ஒன்று

“நீங்கள் ஏன் அழனும்?”

அந்த கோடி ஆத்தில் (கடைசி வீடு) வாசலில் வாழை மரங்கள் கட்டப்பட்டிருந்தது.

“யாருக்கும் யாருக்கும் விவாகம்?”

பிச்சு அய்யர் சுந்தரம் அய்யரைப் பார்த்துக் கேட்டார்.

“அதோ விளையாடிண்டிருக்காளே அவா ரெண்டு பேருக்கும் தான் நாளைக்கு விவாகம். பொண்ணு பேரு ஆவுடை. பையன் நம்மாத்து சீனு”

“சீரு செனத்தி எல்லாம் நன்னா செய்யராளோன்னோ?

“பேஷா ! சுந்தரம் பையனுக்குன்னா பொண்ணு கொடுக்கறா? செய்ய மாட்டாளா பின்ன?”

“கொடுத்து வச்சிருக்கனும்”

இந்த உரையாடல் பற்றி எதுவும் தெரியாமல் அந்த மாப்பிள்ளையும் பொண்ணும் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

நாலு கட்டு வீடு, சமையல் கட்டில் மடியாக பக்ஷண வேலைகள் நடந்து கொண்டிருந்தது. புதிய வேஷ்டிகள், புடவைகள், பாவாடைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

“சாஸ்திரிகள் மாமா வந்துட்டார்! தீர்த்தம், மோர் கொண்டு வாங்கோ!”

சுந்தரம் அய்யரின் குரல் ஓங்கி ஒலித்தது.

“ஏற்பாடெல்லாம் ஆயிண்டிருக்கா?”

மூர்த்தி சாஸ்திரிகள் கேட்க,

“எல்லாம் சித்தமாயிடுத்து, ஒரு வாட்டி நீங்களும் பார்த்திடுங்கோ”

“காலம்பர ஏழரை ஒம்போது முகூர்த்தம். விடிகாலம்பரயே எல்லாரும் ஸ்நானம் பண்ணி வாசல்ல, மித்ததில கோலம் போட்டு தயாராயிடுங்கோ, பொண்ணு மாப்பிள்ளை ரெண்டு பேரும் தூங்கிடப் பொறா, எழுப்பிடுங்கோ”

“சரி சாஸ்திரிகளே! கவலப் படாதீங்கோ, எல்லாம் சரியா பண்ணிடலாம். ”

சுந்தரம் அய்யர் சொன்னபடியே மறுநாள் காலையில் விவாகம் விமரிசையாக ஆரம்பித்தது.

பொண்ணு மாப்பிள்ளை ரெண்டு பேருக்கும் நன்றாக அலங்காரம் செய்து வைத்திருந்தார்கள்.

“காசி யாத்திரைக்கு நேரம் ஆயிடுத்து, மாப்பிள்ளையை அழச்சிண்டு வாங்கோ”

கையில் விசிரியுடன், கைத்தடி, புத்தகம் சஹிதம் சீனு மாப்பிள்ளை தயாராக இருந்தார்.

காசி போக இருந்த மாப்பிள்ளையை எதிரே சென்று அழைத்து வந்தார் ஆவுடையின் பெரியப்பா, பெண்ணின் தகப்பனார் இல்லாத காரணத்தால்

“மாப்பிள்ளை பொண்ணோட தாய் மாமாக்கள்ளாம் இருக்காளா”

யாரோ ஓங்கி குரல் கொடுத்தார்.

மாலை மாற்று வைபவம் மிக கோலாகலமாக நடைபெற்றது. ஊஞ்சலில் இருவருக்கும் பாலும் பழமும் கொடுத்து பச்சப் பொடி சுத்தி பாணிகிரகணமும் ஆச்சு. மேடையில் அமர்ந்து தாரை வார்த்து கொடுத்தார் ஆவுடையின் பெரியப்பா.

குறிப்பிட்ட முகூர்த்தத்தில் அந்தப் பெண் / சிறுமியின் கழுத்தில் திருமாங்கல்ய தாரணம் செய்தான் அந்த சீனுவாசன் என்கிற சிறுவன்.

எல்லாரும் சாப்பிட்டு உட்கார்ந்திருந்தார்கள்.

“கல்யாணம் ஜாம் ஜாம்னு ஆயிடுத்து. ஜமாய்ச்சுட்டெள் சுந்தரம் அண்ணா”

“ஆமாம் சாப்பாடு பிரமாதம்”

“சுந்தரமாத்து கல்யாணம்னா சும்மாவா”

“பொண்ணு மாப்பிள்ளை ஜோடிப் பொருத்தம் ரொம்ப நன்னா இருக்கு”

வந்திருந்த அனைவரும் மிகவும் பாராட்டி விட்டு சென்றனர்.

“பொண்ணு பெரியவளாற வரைக்கும் அவாத்துலதான் இருக்கணும். எல்லாம் ஞாபகம் வச்சுகுங்கோ.”

“கர்பாதான சம்ஸ்காரம் அதுக்கு அப்பறம்தான்”

அந்த ஆவுடைச் சிறுமி தனது அகத்திற்கு திரும்பினாள். சிறுமி ஆயினும் அவளிடம் ஓர் அமைதியும் ஆனந்தமும் இயற்கையாகவே இருந்தது.

சீனுவையும் ஆவுடையையும் இப்போதெல்லாம் சேர்ந்து விளையாட யாரும் அனுமதிப்பதில்லை.

ஆறு மாதங்கள் கடந்திருக்கும்.

ஒரு விடிகாலைபோது. அனைவரின் மகிழ்ச்சியையும் கலங்க அடிக்கும் அந்த கோர சம்பவம் நடக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

குடும்பம் என்றால் என்ன ? கணவன் மனைவி என்றால் என்ன என்று சிறிதும் அறியாமல் திருமணம் செய்து கொண்ட அந்த சின்ன மாப்பிள்ளை சீனுவாசன் அரவம் தீண்டி அந்த காலை வேளையிலேயே வைத்தியர் வருவதற்குள் காலன் கை வசமானான்.

ஆறு மாதங்கள் முன்பு சிரிப்பலைகள் நிறைந்த அந்த மாப்பிள்ளை வீட்டில் அழுகைக் குரல்கள் அதிர வைத்தது.

அதேபோல் பெண்ணின் அகத்தில் அனைவருக்கும் அதிர்ச்சி. அங்கேயும் அழு குரல்கள்.

ஆவுடையை கட்டிக் கொண்டு அவள் அம்மா அழுது தீர்த்தாள்.

“எல்லாமே போச்சுடி, உன் ஆம்படையான் சீனு மாப்பிள்ளை இறந்துட்டாண்டி” என்று கட்டிப் பிடித்துக் கொண்டாள் அம்மா.

அங்கேயிருந்த அனைவரையும் ஸ்தம்பிக்க வைத்தது ஆவுடையின் அந்தக் கேள்வி!

“அவாத்து பையன் செத்துப் போனால் நீங்கள் ஏன் அம்மா அழனும்?”

பயணம் தொடரும்….

Leave a Reply

Your email address will not be published.