அறிமுகம்

புதுமைப்பெண்ணின் பயணம் 

வரலாற்று குறுந்தொடர்
(எழுதியவர் : வேதாந்தக் கவியோகி நாகசுந்தரம், புது தில்லி)

ஆவுடை அக்காள் என்பவர் 18 – 19 ஆம் நூற்றாண்டுக் காலப் பகுதியில் வாழ்ந்த பெண் தமிழ்க் கவிஞர். இவர் ஆயிரம் பாடல்களுக்கு மேல் இயற்றி உள்ளார். இவரின் பாடல்கள், பாடல்களின் கையாண்ட மொழி, உள்ளடக்கம் ஆகியன பாரதியாருக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பாரதியாரின் புதுமைப் பெண் சிந்தனையே இவரின் வாழ்க்கையை ஒட்டித்தான் இருந்திருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இவரைப் பற்றிய ஆய்வினை திருமதி கோமதி ராஜாங்கம் (பாரதியாரின் உறவினர்) அவர்கள் செய்துள்ளார்.

ஆவுடை அக்காளின் பாடல்கள் பல சிறு நூல்களாகவும், திரட்டு நூல்களாகவும் வெளிவந்துள்ளன. ஆவுடையக்காள் வேதாந்தப் பாடல் திரட்டு, பிரம்ம மேகம் ஆகியன குறிப்பிடத்தக்கன.

இவரது பாடல்களில் பெண் உரிமை/பெண்ணிய, சித்த, அத்வைத, வேதாந்த கருத்துக்கள் பரந்து கிடைக்கின்றன. இவரது குருவாக விளங்கி இவரை ஞான மார்க்கம் நோக்கி செல்ல வைத்தவர் ஶ்ரீஶ்ரீதர அய்யாவாள் என்கிற ஶ்ரீ வெங்டேசுவரர் அவர்கள். அந்த மகானின் வரலாற்றையும் இந்த தொடரின் இறுதியில் நாம் காணப்போகிறோம்.

அடக்குமுறை நிறைந்த அந்தக் காலத்திலேயே பெண்களும் எவ்வாறு ஞானமடைந்தனர் என்ற ஒரு விஷயத்தை மையமாகக்கொண்டு இந்த தொடர் அமையப்போகிறது.எனவே இதில் இடம்பெறும் கருத்துகளுக்கு இந்த வரலாற்றின் அமைப்பே, காரணம். மேலும் அந்த காலக்கட்டத்தில் இருந்தவர்களின் பெண் அடிமைத் தனத்தை விளக்க வந்த வகையில் இந்த தொடரில் கருத்துகள் இடம்பெற்றுள்ளன என்பதை உணர்ந்துவாசகர்கள் தயவுசெய்து இந்த எழுத்தாளனை மன்னிக்கவும். கட்டுரையாகவும், செய்திகளாகவும் இல்லாமல் கதை வடிவில்சொல்ல முயற்சித்திருக்கிறேன். சில இடங்களில் கதை சிறப்புக்காக வசனங்கள் புனைந்துரைக்க பட்டடுள்ளனவே தவிர வேறொன்றுமில்லை.

இவரது பாடல்களால் ஈர்க்கப்பட்டு இவரின் வாழ்க்கையை ஒரு வரலாற்று குறுந்தொடராக இயற்றியுள்ளேன். இதனை பல நூறு பக்கங்கள் கொண்ட நீண்ட நூலாக நினைக்க வேண்டாம். சிறு சிறு அத்யாயங்களாக ஆவுடை அக்காளின் சரித்திரத்தை ஒரு குறுந்தொடராக ஒருவாறு எழுத முயற்சித்திருக்கிறேன், அவ்வளவுதான்.

வாருங்கள், புதுமைப்பெண்ணின் ஞானப் பயணத்தில் நாமும் சேர்ந்து பயணிப்போம்.

மெய்யன்பன்
வேதாந்தக் கவியோகி நாகசுந்தரம்
26.05.2022

Leave a Reply

Your email address will not be published.